தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema) கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 பேரும், மவான்ஸா (Mwanza) நகரில் 200-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டதாகவும், பிற பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்து, மொத்த பலி எண்ணிக்கை சுமார் 700 ஆக இருக்கலாம் என்றும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும், மொத்த எண்ணிக்கை 700 முதல் 800 வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகமும் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து கவலை தெரிவித்ததுடன், பாதுகாப்புப் படைகள் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கிடைத்த தகவல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தலுக்கு முன்னரே பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டனர். இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை குறித்த தகவல்களைச் சரிபார்க்க முடியாத அளவிற்கு நாடு முழுவதும் இணையத்தள சேவை துண்டிக்கப்பட்டிருப்பதும் தகவல் சரிபார்ப்பை கடினமாக்கியுள்ளது.

