கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண, விவசாயமும் கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர்விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ தலைமையில், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்குபற்றுதலுடன் வியாழக்கிழமை (30) மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண மீன்பிடித்துறை அபிவிருத்தி சார்பாக கடந்த கால திட்டங்களும் எதிர்காலத்தில் (2026) நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மீன்பிடித் தொழிலில் எதிர்நோக்கின்ற பிரச்சினைகளும் அதேவேளை அடுத்த வருடம் எவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பான விடயங்களும் கலந்துரையாட்டு வருகின்றன.
மேலும் யாழ். மாவட்டத்தை பொறுத்தவரையில் மக்களுடைய பிரதான தொழில்களில் விவசாயம் மற்றும் கடல் தொழில் மிக முக்கிய இடத்தில் இருக்கின்றன.
நன்னீர் மீன்பிடி சார்ந்த ஏற்பாடுகள் மிகக் குறைந்தளவு இருந்தாலும், வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டத்தில் கடல் வளங்களோடு நன்னீர் வளமும் காணப்படுகிறது. அந்த வகையில் தொழில்சார் பொருளாதார ரீதியான முரண்பாட்டுக்கு இந்த கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி என்பது ஆரோக்கியமான விடயமாக உள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் என்ற ரீதியில் ஏனைய மாவட்டங்களில் இத்தகைய செயற்பாடுகள் மாவட்ட ரீதியாக ஆராயப்படுகின்றபோது அதற்குரிய பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருக்கும்.

மீன்பிடி அமைச்சராக தமிழ் பேசுகின்ற அமைச்சர் இராமலிங்ம் சந்திரசேகர் இருப்பது பிரச்சினைகளை இலகுவாக அடையாளம் கண்டு இலகுவில் அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவியாக இருக்கிறது.
கடந்த வாரம் கடல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்புடைய சம்மேளனங்கள், சங்கங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடைய பிரச்சினைகள், குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் தலைமையில் எடுக்கப்பட்டன.
அதிகாரிகள், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை இணைந்து தீர்ப்பதனூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மேலும், கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். இந்திய ரோலர்களின் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சர்வதேச ரீதியாக காணப்படுகின்றன. இது தொடர்பாக அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும், அதிகாரிகள் மீனவர்களின் பிரச்சினைகளை அணுகி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அந்த மட்டத்திலேயே தீர்ப்பதன் ஊடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வட மாகாண விவசாய அமைச்சு உள்நாட்டு மீன்பிடி அலகின் பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வட மாகாண உள்நாட்டு மீன்பிடி உதவி இயக்குநர் (NAQDA -தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டு ஆணையம்) மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னாா் மாவட்ட கடல்சாா் மீன்பிடி உதவி இயக்குநர்கள், வட மாகாண விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

