துன்புறுத்தல்கள் தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் வாக்குமூலம்

32 0

பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் ஒருசில அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் வெளிவாரி விசாரணை குழு, அங்கு மேலும் சில ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அலகப்பெருமவின் தலைமையிலான இந்த குழுவின் விசாரணை நடவடிக்கை இந்த வாரத்தில் முவுவுக்கு வர இருக்கிறது.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அதன் அறிக்கை பெரும்பாலும் இரண்டு வாரங்களுக்குள் சபாநாயகருக்கு கையளிக்கப்படும் என தெரியவருகிறது.

குறித்த  வெளிக்கள விசாரணை குழு பாராளுமன்ற பொதுச் செயலாளர்,பிரதிச் செயலாளர் மற்றும் உதவிச் செயலாளர் ஆகியோரிடம்  கடந்த தினங்களில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இந்த மூன்று பேரிடமும் நிர்வாகம் தொடர்பான சில விடயங்களை  கேட்டு  தெளிவு பெற்றுக்கொள்ளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

அதேபோன்று சம்பவம் தொடர்பில் தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதானிகள் முறைப்பாட்டு அதிகாரி மற்றும் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் ஆகியோரிடமும் இதற்கு முன்னர் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.