கொழும்பு – 15, காக்கைதீவு கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் காணப்படுவதாக தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிதம்பரப்பிள்ளை மனோகரன், இதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பேண க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நீண்டகால பொறிமுறை ஒன்றை அமுல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு களநிலைமைகளை ஆராய்ந்த பின்னர், சிதம்பரம் மனோகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரிவித்தவர்,
கொழும்பு காக்கைதீவு கடற்கரைப் பகுதி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினங்களில் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பல தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆதரவுகளை வழங்கி வருகின்றன. இதனால் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை. குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
இருந்தபோதிலும் ஒவ்வொரு சிரமதானத்தின்போதும் களனி ஆற்றில் மக்களால் வீசப்படும் பல்வேறு வகையான குப்பைகள் கொழும்பு, காக்கைதீவு கடற்கரையில் ஒதுங்கும் நிலையில் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு இது ஒரு தொடர்கதையாகவே இடம்பெற்று வருகின்றது. இதற்கு பொது இடங்களில், ஆற்றுக்குள் மற்றும் நீர் நிலைகளில் குப்பைகளை வீசுவோர் மீது அரசாங்கம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு கடற்கரையில் ஒதுங்கும் குப்பைகளால் காக்கை தீவு கடற்பகுதி மற்றும் அங்குள்ள மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை துப்புரவு செய்தும் எந்த பிரியோசனமும் இல்லை. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக குப்பைகளை பொது இடங்களில் வீசுவோருக்கு எதிராக 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை தண்டப்பணத்தை அறவிடவேண்டும்.
ஒரு சிலரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்களான ஆமை உள்ளிட்டவற்றுக்கு பெரும் பாதிப்பையும் அச்சுறுத்தலையும் எற்படுத்தும். அத்துடன் எதிர்காலத்தில் எமது நாட்டின் வளத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, தற்போதைய கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார், இதனை ஒரு முக்கியமான விடயமாக கருதி இதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சிறந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
சிறந்த திட்டத்தை முன்னெடுக்கும்போது நானும் அவர்களுக்கு எனது கடந்த கால அனுபவங்களின் மூலம் பெற்ற விடயங்களை பகிர்ந்து உதவுவதற்கு தயாராக இருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

