மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் ; பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

26 0

மித்தெனியவில் காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரியை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரி காணொளி அழைப்பு ஊடாக இன்று புதன்கிழமை (29) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மித்தெனியவில்  உள்ள காணி ஒன்றில் செப்டெம்பர் 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர்  சம்பத் மனம்பேரியின் சகோதரர் பியல் மனம்பேரி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.