வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என அறியப்படும் சந்தேகநபர் ஒருவர் உட்பட மூன்று பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பகுதியில் அனுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக திங்கட்கிழமை (27) பிற்பகல் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து போதைப்பொருளுடன் 3 சந்தேகநபர்களை கைது செய்திருந்தனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 106 கிராம் ஹெரோயின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்களில் ஒருவர் 44 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாயாவதுடன் குறித்த நபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த நபர் நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் துப்பாக்கிதாரியாக செயற்பட்டவர் என சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
டுபாயிலிருந்துக் கொண்டு நாட்டினுள் குற்றச்செயல்களை வழி நடத்திவரும் குற்றவாளி ஒருவரின் கீழ் துப்பாக்கிதாரி என அறியப்படும் நபர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் 30, 40 வயதுடைய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

