பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பிரதேசமான கோமாரி களுகொல்லை பிரதேசத்தில் இந்திய மக்களின் பங்களிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, களுகொல்லை மக்களிடம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குடிநீர்த் தாங்கிகளை கையளித்தார்.

இதன்போது உரையாற்றிய சந்தோஷ் ஜா,
இலங்கையில் இந்தியா முன்னெடுத்து வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில், ஒரு பகுதியாக இன்று கையளிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் ஒன்றாகும்.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கில் நாங்கள் பல்லாயிரக்கணக்கான வீடுகளை நிர்மாணித்திருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான கல்வி ஸ்தாபனங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்களும் எம்மால் வழங்கப்பட்டுள்ளதுடன் தொழிற்பயிற்சி நிலையங்களும் எம்மால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கிழக்கில் 2.35 பில்லியன் இலங்கை ரூபாய் விசேட பல்துறை நன்கொடை உதவி எங்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித் திட்டத்தின் கீழ் முப்பத்தி மூன்று சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கும் இலங்கையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சாத்தியமான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் நாம் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.
இலங்கை மக்களின் நல்வாழ்வு தொடர்பில் இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பதனை உறுதியளிக்கின்றேன் என்றார்.
இதன்போது இந்திய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட களுகொல்லை பேருந்து தரிப்பிடமும் சந்தோஷ் ஜாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அப்துல் வாசித், பொத்துவில் பிரதேச சபையின் உதவி தவிசாளர் அலியார் மாபீர், பொத்துவில் பிரதேச செயலாளர் மொஹமட் நசீல் மற்றும் கோமாரி பிரதேச பொதுமக்களும் கலந்துகொண்டனர்.









