எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது

50 0

மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தபடப் வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணய விடயத்தினைக் காண்பித்து இழுத்தடிப்பு செய்யக்கூடாதென ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகபேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரச தரப்பால் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருவது தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக அரசாங்கம் மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றது. மாகாணசபைத்தேர்தல் அடுத்தவருடம் வைக்கவுள்ளதாக ஒருபக்கம் கூறுகிறது. மறுபக்கத்தில்  எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இறுதியாக்கப்பட்டு புதிய முறையில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கூறுகின்றது.

பாராளுமன்றில் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய ஆட்சியாளர்களும் சேர்ந்து தான் அன்று எதிர்த்தார்கள். தற்போது தேர்தலை வைப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக பழைய முறையில் தேர்தலை நடத்தலாம்.

ஆனால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதற்கு  தயாராக இல்லை. அடுத்த வருடம் தேர்தலை வைப்பதாக இருந்தால், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பாராளுமன்ற அனுமதி தேவையாக உள்ளது.

அவ்வாறு இல்லாமல் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யவேண்டுமென்றால் அதற்கு பல வருடங்களாகும். ஆகவே தேர்தலுக்கு உடனடியான சத்தியமில்லை. அந்த வகையில் அரசாங்கம் உண்மையாக என்ன செய்ய போகிறது என்பதை கூறவேண்டும்.

கடந்த காலத்தில் எல்லைகளை நிர்ணயம் செய்யவதற்கு முற்பட்டபோதுதான் தென் பகுதியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது போகிறது, மலையகத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாது போகிறது என்ற பிரச்சினை தோற்றம்பெற்றது.

ஆகவே எல்லைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு காலஅவகாசம் வேண்டும். அதற்கு ஒருவருடம் போதாது. எனவே அரசாங்கம் உண்மையாகவே தேர்தலை வைக்கப்போகின்றார்களா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது.

ஐனாதிபதி அநுர மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில்  எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அவர் மௌனமாக இருக்கிறார். அமைச்சர்கள் தான் மாறிமாறி பலவிதமாக கருத்துகளை கூறிவருகிறார்கள்.

ஆனால் பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் அடுத்தவருடம்  தேர்தல் நடைபெறுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவருடம் என்றால் எந்த மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்பதே கேள்வியகவுள்ளது.

ஆகவே அரசாங்கம் தேர்தல் சட்ட திருத்தத்தை  கொண்டு வந்தால் தான் தேர்தல்கள் ஆணையாளர் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தெளிவாக அறிவிப்பார்.

தற்போது, இப்போது மாகாணங்கள் ஆளுநர்களின் கைகளில் உள்ளன. ஆளுநர்கள் ஐனாதிபதி, அரசாங்கம் சொல்வதை செய்து கொண்டு இருக்கிறார்கள்  அவர்கள் அதனைத்தான் செய்ய முடியும்  இதனை விட வேறு எதனையும் செய்ய முடியாது.

எனவே மாகாண சபையில் மக்கள் ஆட்சி தேவை என்பதை தமிழ்  மக்கள் கிளர்தேழுந்து அரசாங்கத்திற்கு அழத்தமாக கூறவேண்டும். அவ்வாறான முயற்சி செய்யாவிட்டால் அரசு மாகாண சபை தேவையில்லை என்பதை கூற முன்வந்துவிடும்.

கிடைத்த அதிகாரம் மக்களால் பயன்படுத்தப்பட வேண்டும்  எனவே தேர்தல் நடாத்தப்படவேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்தால்  தேர்தலை வைக்காது இழுதடிக்கின்ற செயற்பாட்டை செய்து வருகின்ற என்றார்.