வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு) மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பல பொலிஸ் குழுக்கள் இணைந்து துரித விசாரணைகளை ஆரம்பித்தன.
அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரம் – கெகிராவ பொலிஸ் பிரிவின் 50 வீட்டு தொகுதியில், இக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்டனர்.
இதன்போது, பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அப்பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்ற, அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக என்பவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

