அக்கரபத்தனை பிரதேசத்திலிருப்பது நான் தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்த காணி!

28 0

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை பிரதேசத்தில் நான் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் காணி எனது தனிப்பட்ட சொத்தாகும். அதற்கான ஆதரங்கள் என்னிடம் இருக்கின்றன. அது சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்ட காணி அல்ல. தனிப்பட்ட ரீதியில் நான் கொள்வனவு செய்த காணியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அக்கரபத்தனையில் எனக்கு இருப்பதாகக் கூறப்படும் காணி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனிப்பட்ட ரீதியில் நான் கொள்வனவு செய்த இடமாகும். அதில் மறைப்பதற்கு எந்தவொரு இரகசியமும் இல்லை. ஆனால் ஆளுங்கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு இது தொடர்பில் தவறான தகவலே கிடைக்கப் பெற்றுள்ளது.

அரசியலுக்கு வர முன்னரே நான் பெருந்தோட்டத் துறைசார் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றேன். அது எனது பரம்பரை தொழிலாகும். அந்த வகையிலேயே அக்கரபத்தனை பிரதேசத்தில் நான் குறித்த காணியை கொள்வனவு செய்திருக்கின்றேன். அது எனது தனிப்பட்ட சொத்தாகும். அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே அது குறித்த முழுமையான தகவல்களையும் ஆவணங்களையும் வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஊடகங்களும் இது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். தவறான தகவல்களின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியில் நபரெர்ருவர் குறித்த தகவல்களை வெளியிடும் போது மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.