சொத்து குவிப்பு விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டு கலேன்பிந்துனுவெவ பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சமந்த நாமல் விஜேவர்தனவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணைக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை சந்தேகநபர் புறக்கணித்த நிலையில் இந்த கைது இடம்பெற்றதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கலேன்பிந்துனுவெவ பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சமந்த நாமல் விஜேவர்தனவுக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஒத்துழைக்காத காரணத்துக்காக நேற்று (24) காலை 11.40 மணியளவில் எல்லவெவ, கலேன்பிந்துனுவெவ பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 126 மற்றும் 127 (1) (உ) சரத்தின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தரவை நிராகரித்தமை அல்லது புறக்கணித்தமை மற்றும் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கமைய விசாரணைகளுக்கு உரிய காரணங்களின்றி முன்னிலையாகாமல் இருந்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக கலேன்பிந்துனுவெவ பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கைதுசெய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபர் நேற்றைய தினம் கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை சந்தேகநபரான சமந்த நாமல் விஜேவர்தன விளக்கமறியலில் வைக்குமாறு கஹடகஸ்திகிலிய நீதவான் உத்தரவிட்டார்.

