அமைச்சரவையை மறுசீரமைப்பதால் குறைநிரப்பு பிரேரணையின் மொத்த தொகையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. கடந்த கால எடுத்துக்காட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றலாம். அமைச்சரவை மறுசீரமைப்பினால் குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதில் எவ்வித சட்ட சிக்கலும் ஏற்படாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
குறைநிரப்பு பிரேரணை மற்றும் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் குறித்து நிதியமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.
பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டால் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.
2024 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை 2023.09.27 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டு, பிரேரணை 2023.10.05 ஆம் திகதியன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் 2023.10.23 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மறுசீரமைத்தார். அமைச்சரவையை மறுசீரமைப்பதால் குறைநிரப்பு பிரேரணையின் மொத்த தொகையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
கடந்த கால எடுத்துக்காட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றலாம். அமைச்சரவை மறுசீரமைப்பினால் குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதில் எவ்வித சட்ட சிக்கலும் ஏற்படாது என்றார்.

