இந்தியா செல்கிறார் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க

44 0

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, இந்திய கடல்சார் வாரம் 2025 நிகழ்வில் பங்கேற்பதற்காக, எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மும்பை செல்லவுள்ளார்.

இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, மும்பை கண்காட்சி மையத்தில் நடைபெறும். இதில் துறைமுக உட்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் நிலையான கடல்சார் வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க உலகளாவிய கடல்சார் தலைவர்கள், தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் அநுர கருணாதிலக்கதனது விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான துறைமுக மேம்பாடு, கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய பிரதி அமைச்சர் சர்பானந்தா சோனோவாலுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் திட்டமிட்டுள்ளார். அவர் இந்திய கடல்சார் வாரத்தின் அமைச்சரவை அமர்வில் பங்கேற்பதுடன், கடல்சார் மற்றும் தொழில்துறைப் பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார்.

27 முதல் 31 வரை நடைபெறவுள்ள இந்திய கடல்சார் வாரம், சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், துறைமுக நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதற்கும், கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் ஒரு முக்கிய தளமாகச் செயல்படும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் அமைச்சர் அநுர கருணாதிலக்கவின் பங்கேற்பானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான பொருளாதாரப் பங்காளித்துவத்தையும், வர்த்தகம், தளவாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அவற்றின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.