பொருளாதாரத்தை படிப்படியாக ஸ்திரப்படுத்துவதன் மூலமாகவே மக்களின் கனவுகளை நனவாக்க முடியும். அந்த வகையிலேயே தற்போது வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இறக்குமதி வரிகளில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதாரத்தை படிப்படியாக ஸ்திரப்படுத்துவதன் மூலமாகவே மக்களின் கனவுகளை நனவாக்க முடியும். 4 ஆண்டுகளாக வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றுள்ளோம். எமது அந்நிய செலாவணி இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், இறக்குமதி வரி வருமானத்தை மதிப்பாய்வு செய்து தான் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
படிப்படியாக பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வரும் நாட்டில் அனைத்தையும் ஒரே சந்தர்ப்பத்தில் அனுமதிக்க முடியாது. அந்த வகையில் தற்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் படிப்படியாக வாகன இறக்குமதிக்கான வரிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

