விரும்பும் நபர்களை கொண்டு சுமைகளை ஏற்றி, இறக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை நகரியைச் சேர்ந்த ஏஆர்ஏஎஸ் நிறுவனம், தங்கள் பணியாளர்களை கொண்டு பொருட்களை ஏற்றி, இறக்கும் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடவும், பாதுகாப்பு வழங்கவும் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தது.
இதேபோல, திருச்சியைச் சேர்ந்த பழைய பேப்பர் தொழில் நடத்தி வரும் ஷேக்அர்ஷாத், பாக்கியராஜ் உள்ளிட்டோர் தொழிலாளர் சங்கத்தினருக்கு எதிராகவும், திருச்சி மாவட்ட சுமைப் பணி தொழிலாளர் சங்கம் சார்பில், சுமை தூக்கும் தொழிலாளர் விவகாரத்தில் வியாபாரிகள் சங்கங்கள் தலையிட தடை விதிக்கக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வர்த்தகம் அல்லது வணிகம் மேற்கொள்வோர், தாங்கள் விரும்பும் நபரை பணியில் அமர்த்த சுதந்திரம் உள்ளது. அதேநேரத்தில், இந்த உரிமையால் தனி நபர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.
தமிழகத்தில் சுமை தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சேவைகளை ஒழுங்குப் படுத்த சட்டம் இல்லை. இதனால் தொழிற்சங்கம் என்ற போர்வையில் கட்டுப்படுத்தப்படாத சுரண்டல் நடக்கிறது. எனவே, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சட்டத்துக்கான வெற்றிடத்தை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருச்சி, மதுரையில் மனுதாரர்கள் தாங்கள் விரும்பும் தொழிலாளர்களை கொண்டு சரக்குகளைக் கையாள போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். திருச்சியில் சுமைப் பணி தொழிலாளர் பிரச்சினையால் உருவான வழக்குகளை போலீஸார் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மிரட்டுவது, பணம் பறிப்பதைக் கண்டறிந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

