யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

145 0

தமிழீழப்பற்றோடும் தாய்மொழிப்பற்றோடும் தனது இறுதிமூச்சுவரை தமிழீழ விடுதலைக்காய்ப் பணியாற்றிய யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்கள், 12.10.2025 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ மண்ணை ஆழமாக நேசித்த இவர், தாயகத்தில் சமூக அக்கறையுடன் மொழி, இனவிடுதலை உணர்வோடு தனது இளமைக்காலத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த பல பணிகளை ஆர்வத்தோடு ஆற்றியவராவார். பின்னர், 1981 ஆம் ஆண்டு தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து யேர்மனி நாட்டில் பேர்லின் நகரில் வாழ்ந்துவந்தவராவார்.

இவர், தனது புலம்பெயர்வாழ்வின் ஆரம்பகாலத்தில், தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த தாயக நிலவரங்களை அறிந்துகொள்வதற்கு உத்தியோகபூர்வ வானொலி இல்லாத சூழ்நிலையில், ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகளைத் தொலைபேசிப்பதிவினூடாகத் தமிழ்மக்களுக்குக் கொண்டுசெல்லும் பணியினைச் செய்தவராவார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப் பக்கபலமாகப் புலம்பெயர்நாடுகளில் தமிழீழ விடுதலையை நோக்கிய செயற்பாடுகள் கட்டமைப்புரீதியாக முன்னெடுக்கப்பட்டபோது, தன்னையும் ஒரு செயற்பாட்டாளராக யேர்மனிக்கிளையுடன் இணைத்து இறுதிவரை செயற்பட்டவராவார்.

இவர், தனது ஆங்கில மொழியறிவு மூலம் பல்லினமக்கள் மத்தியில், தமிழ்மக்கள் மீது சிங்கள இனவாத அரசு புரிந்த இனவழிப்புப் பற்றியும் தமிழ்மக்களின் அரசியல் உரிமைப்போராட்டம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அர்ப்பணிப்போடு பணியாற்றியவராவார்.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றுதல்கொண்டு, போராட்டத்தின் ஆரம்பகாலம் தொடக்கம் தனது இறுதிமூச்சு வரை, தன்னை அர்ப்பணித்துத் தேசவிடுதலைக்காக மிகப்பெரும் பலம் சேர்த்த இவரது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்களின் விடுதலைப்பற்றிற்காகவும் தேசவிடுதலைக்கு அவர் ஆற்றிய பணிகளிற்காகவும் ‘நாட்டுப்பற்றாளர்’; என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்