அண்மையில் வலுச்சக்தி அமைச்சரினது தலைமையில் ஒன்றிணைந்த தேசிய சுதந்திர தொழிற்சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அந்த சங்கத்தின் செயலாளர் சமிந்த கமகே மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், குறித்த தொழிற் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றும் திரு.பிரியந்த மதுகுமார அவர்களை அறையொன்றில் அடைத்து வைத்து, அவரது கைத்தொலைபேசியில் காணப்பட்ட தரவுகளை அழித்த நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் 23,000 ஊழியர்கள் சார்பாக கடந்த காலங்களில் வீதியில் இறங்கிய மக்கள் விடுதலை முன்னணி, இன்று தொழிற்சங்க உறுப்பினர்களைத் தாக்கியமை குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் உரிமைகளுக்காக, அரச நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக, அன்று தொழிலாளர்களை வீதிக்கு இறக்கிய தற்போதைய ஆளும் தரப்பினர், இன்று, தொழிற்சங்க அங்கத்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். இது சட்டவிரோதமான செயலாகும். இந்த விவகாரம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையொன்று அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையினுள் ஐக்கிய மக்கள் சக்திக்கு தொழிற்சங்கமொன்று இல்லை. இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

