ரஷ்யா – உக்ரைன் மோதல் : “சண்டையை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்; மக்களை கொல்லாதீர்கள் ” – ட்ரம்ப்

81 0

“ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு தரப்பு போர்வீரர்களும் சண்டையை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டும். மக்களை கொல்வதை நிறுத்துங்கள், அனைத்தையும் நிறுத்திவிடுங்கள்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேல் போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி புதினை ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும்  அந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.

அடுத்து, கடந்த 18ஆம் திகதி வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ட்ரம்பை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புப் பிறகு ட்ரம்ப், எக்ஸ் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தார்.

“நாம் மக்களை இழக்கவில்லை. நாம் பணத்தை செலவு செய்யவில்லை. நமது ஆயுதங்களுக்கு பணம் கிடைக்கிறது. நேட்டோவுடன் நல்ல ஒப்பந்தத்தை செய்துள்ளோம்.  ஆனால், நாம் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்காக மட்டுமே” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து, ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தபோதும் ட்ரம்ப் தனது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

“உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியம் குறித்து ஜெலன்ஸ்கியிடம் நான் எதுவும் பேசவில்லை. ஆனால், அவர்கள் இப்போது செய்யவேண்டியது, போரை நிறுத்துவது மட்டுமே. உக்ரைன் வீரர்கள் தற்போது உள்ள போர்முனைகளில் அப்படியே நின்றுவிட வேண்டும். இரண்டு தரப்பினரும் சண்டையை நிறுத்தியவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டும். மக்களை கொல்வதை நிறுத்துங்கள். அனைத்தையும் நிறுத்திவிடுங்கள்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

அண்மையில் இஸ்ரேல் – காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போது “போர்களை நிறுத்துவதில் நான் வல்லவன்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

அதற்கிணங்க, உலகில் இடம்பெறும் போர்களை, ஒவ்வொன்றாக நிறுத்துவதில் தற்போது ட்ரம்ப் கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.