மட்டக்களப்பு நகரில் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களின் ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதலில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பேர் படுகாயமடைந்துள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது.
இது தொடர்பாக தெரியவருவதாவது:
மட்டக்களப்பில் கோட்டைமுனை பாலத்துக்கு அருகில், இரண்டு ஆடை விற்பனை நிலையங்கள் அருகருகே அமைந்துள்ளன.

புதன்கிழமை (15) அவ்விரு நிலையங்களின் ஊழியர்களும் தத்தமது ஆடையகங்களுக்கு முன்பாக நின்று, வீதியால் செல்லும் பொதுமக்களை ஆடை வாங்க வருமாறு போட்டி போட்டு கூவி அழைத்துள்ளனர்.
அப்போது இரண்டு நிலையங்களின் ஊழியர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் கைகலப்பாக மாறி, கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாவும் கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை (17)நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


