வெதுப்பக உணவு பொருட்களை விற்பவர் கஞ்சாவுடன் கைது

55 0

வெதுப்பக உணவு பொருட்களை விற்பனை செய்து வந்த நபர், கஞ்சா கலந்த போதை மாத்திரைகளை தம் வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்டன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கபில விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஹத்தபாங்கொட பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெதுப்பக உணவு பொருட்களை பொகவந்தலாவை, நோட்டன், டயகம உட்பட பல பிரதேசங்களுக்கு தனது லொரியில் சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.

இவ்வாறு விற்பனை செய்பவர், கஞ்சா கலந்த போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக நோர்ட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த லொரி, வெதுப்பக பொருட்களை ஏற்றிக்கொண்டு ஹட்டனை நோக்கிச் சென்ற போது பொலிஸாரால் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இதன் போது குறித்த லொரியில் இருந்து 250 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாகவும் ஒவ்வொரு மாத்திரையும் 200 ரூபாய் பெறுமதியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.