இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியின் (CCPSL) 31வது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை 6.30 மணிக்கு கொழும்பில் உள்ள கலதாரி ஹோட்டலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வோடு இணைந்து வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் முழுமையான நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக “இணைந்திருங்கள், நலமாக இருங்கள்” என்ற தலைப்பில் ஒரு தேசிய திட்டமும் ஆரம்பிக்கப்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாட்டின் உடல், மன, சமூக மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழவும், குடும்பத்தினர், நண்பர்கள், சமூகம் மற்றும் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும், சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் அத்துடன் வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
இந்த திட்டத்தின் மூலம் இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியானது நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உறுதி பூணுகிறது.
இணைந்திருங்கள். நலமாக இருங்கள்” திட்டம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் நவம்பர் 2025 முதல் இலத்திரனியல் மற்றும் அச்சு அத்துடன் சமூக ஊடகங்கள் மூலம் ஆரம்பிக்கப்படும்.
ஆசியாவின் முதல் சுகாதாரப் பிரிவு 1926 ஜூலை 1 ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தில் நிறுவப்பட்டதிலிருந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதால், 2026 ஆம் ஆண்டு பொது சுகாதார துறைக்கு ஒரு சிறப்பு ஆண்டாக அமைகிறது.
இலங்கை சமூக வைத்தியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்தின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார்கள்.

