கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் பொலிஸார் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தாக்கல் செய்த மனு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
அத்தோடு, பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கடமையை செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த நிலையில் நேற்று புதன்கிழமை (15) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

