ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines), தெற்காசிய பயண விருதுகள் (South Asian Travel Awards – SATA) 2025 விழாவில், ‘பார்வையாளர்களின் விருப்ப விருதுகள்’ (Visitors’ Choice Awards) பிரிவின் கீழ் ‘தெற்காசியாவின் முன்னணி சர்வதேச விமான நிறுவனம்’ (Leading International Airline in South Asia) என்ற விருதை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பிராந்திய விமானப் போக்குவரத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீண்டும் தனது முதன்மை இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான SATA விருதை வென்றதன் மூலம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த மதிப்புமிக்க விருதைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த விமான நிறுவனம் இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு, தூர கிழக்கு, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா என 21 நாடுகளில் 33 இடங்களுக்கு நேரடி விமானங்களை இயக்குகிறது.
இது இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவுகள், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட ஐந்து தெற்காசிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களை கொழும்புடன் இணைக்கிறது. வாரத்திற்கு கிட்டத்தட்ட 130 விமானச் சேவைகளை தெற்காசியாவில் மட்டுமே இயக்குகிறது.
இந்த விருதைப் பற்றி கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய முகாமையாளர் இந்துனில் விஜேகோன்,
“தொடர்ச்சியாக மூன்று முறை இந்த கௌரவத்தைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களை முதல் இடத்திற்குத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த விருது, சிறப்பான சேவை, மூலோபாய வளர்ச்சி மற்றும் இணைப்பு மீதான எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கும், தெற்காசியாவில் விமானப் பயணத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கும் ஒரு சான்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களும், சகாக்களும் இந்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை அறிவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு உண்மையான இலங்கை அனுபவத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறது. இதில் உலகத் தரத்திலான உணவு, பொழுதுபோக்கு மற்றும் வசதிகள் உள்ளன.
பிராந்திய சிறப்புகள், உணவு வகைகள் மற்றும் விமான நிறுவனத்தின் சொந்த விருது பெற்ற இலங்கை உணவுத் தேர்வு எனப் பயணிகளுக்குப் பிடித்த உணவு வகைகளை வழங்குகிறது.
பயணிகள் தங்கள் சொந்த சாதனங்களில் உள்ளடக்கத்தை நேரடியாகப் பார்க்கும் வகையில் வயர்லெஸ் விமானப் பொழுதுபோக்கு (wireless inflight entertainment) மூலம் திரைப்படங்கள் மற்றும் இசையின் விரிவான நூலகத்திற்கான அணுகலைப் பெறுகிறார்கள்.
தெற்காசியாவின் விருந்தோம்பல் மற்றும் பயணத் துறையில் சிறப்பை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க தளங்களில் SATA விருதும் ஒன்றாகும். சேவை, புதுமை மற்றும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

