ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

40 0

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்குளம் பகுதியில் வைத்து வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் புதன்கிழமை (15) மாலை கைதுசெய்துள்ளனர்.

அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் கண்டி ஏ 09 பிரதான வீதியின் அநுராதபுரம் கல்குளம் பகுதியில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சந்தேக நபரிடம் இருந்து 50 கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளினையும் அடுத்த சந்தேக நபரிடம் இருந்து 9240 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இபலோகம  மற்றும் காகம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 30,34 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் கெக்கிராவ,இபலோகம , அநுராதபுரம் பகுதிக்கு ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் அநுராதபுரம் பகுதிக்கு ஹெரோயின் போதைப்பொருளினை எடுத்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக உடன் செயற்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக நீதீமன்ற தடுப்புக் காவல் உத்தரவினை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நுவன் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.