சரண குணவர்தன மீதான 4 வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

65 0

தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும்போது, தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான  மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்  குற்றம் சுமத்தப்பட்டுள்ள  முன்னாள் பிரதியமைச்சர்  சரண குணவர்தன மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளை  விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (13) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்டு இந்த வழக்குகளை சுருக்கமாக முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு, பிரதிவாதி சரண குணவர்தன தனது சட்டத்தரணி மூலம் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த வழக்குகள் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டு வழக்குகளை சுருக்கமாக முடிப்பதற்கான தனது அறிவிப்பை மீள பெறுவதாக பிரதிவாதி சரண குணவர்தன தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

குறித்த வழக்குகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கான திகதியை நிர்ணயிக்குமாறு பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் 19 மற்றும் 25 ஆம் திகதிகளில் தொடர்புடைய வழக்கை விசாரணைக்கு அழைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.