கைதிகள், சந்தேகநபர்கள் தொடர்பில் நீதவான்களுக்கு புதிய சுற்றறிக்கை

33 0

சந்தேக நபரையோ அல்லது கைதியையோ விசேட சிறைச்சாலையில் தடுத்து வைப்பது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதைத் தவிர்க்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு நீதவான்களுக்கு அறிவித்துள்ளது.

சந்தேக நபருக்கோ அல்லது கைதிக்கோ சிறப்புப் பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மற்றும் சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தொடர்பாக சிறப்பு சூழ்நிலைகளில் நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பிக்கும்போது நீதவான்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை அறிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையைப் புதுப்பித்து, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ்ஸால் இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எந்தவொரு சந்தேக நபரையோ அல்லது கைதியையோ சிறையில் உள்ள காலப்பகுதியில் அவர்களின் குடும்பங்களின் சிறப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ள அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் சிறையிலிருந்து அவர்களின் வீடுகள் அல்லது பிற இடங்களுக்கு அழைத்துச் செல்ல நீதவான்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெருங்கிய இரத்த உறவினர்களின் இறுதிச் சடங்குகளின் போது கூட, சிறைச்சாலைத் திணைக்களத்தின் உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளின்படி சிறைச்சாலை கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் சந்தேக நபர்கள் மற்றும் கைதிகள் தேவையான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்.

சந்தேக நபர்கள் அல்லது கைதிகள் மருத்துவ உதவி கோரும் சந்தர்ப்பங்களில், அத்தகைய கோரிக்கைகளை சிறைச்சாலை வைத்தியருக்கு அனுப்ப வேண்டும் என்றும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு குறித்த சுற்றறிக்கை ஊடாக மேலும் தெரிவித்துள்ளது.