ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழுவினர், ஐக்கிய நாடுகளின் செயலகத்தின் தேர்தல் உதவிப் பிரிவின் பணிப்பாளர் மிச்செல் க்ரிஃபின் தலைமையிலான ஐக்கிய நாடுகள் தேர்தல் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவை சந்தித்து உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
1ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தேர்தல் நடைமுறையின் முக்கியச் செயற்பாட்டுக் கட்டங்களான வேட்புமனுக்கள் தாக்கல் செய்தல், வாக்களித்தல் மற்றும் வாக்குகள் எண்ணுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
சட்டங்களை மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் சந்திப்பின் மையப் புள்ளியாக இருந்தது. கோட்டா முறைமைகள் மற்றும் தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்வது தொடர்பான சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் குழுவினர் கலந்துரையாடினர்.
மேலும், உலகளாவிய சூழலில் மாற்றங்களுக்கு ஏற்ப ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். குறிப்பாக, அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சூழலில் ஜனநாயக நடைமுறைகளைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கையின் தேர்தல் களத்தில் உள்ள பல்வேறு பங்குதாரர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்காக, ஐ.நா. குழுவின் பரந்த மதிப்பீட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

