உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போன்று வசீம் தாஜூதீன் விவகாரத்திலும் ஏமாற்றும் அரசாங்கம்

38 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் உட்பட முழு கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றியுள்ள அரசாங்கம், இன்று றக்பி வீரர் வசீம் தாஜூதீன் விவகாரத்திலும் அவ்வாறே செயற்பட்டுள்ளது. வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் உட்பட முழு கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றியுள்ள அரசாங்கம் இன்று விசாரணைகளை நிறைவு செய்வது இலகுவானதல்ல எனக் குறிப்பிடுகின்றது. இதேவேளை வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான பழியை ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட கஜ்ஜா என்ற நபர் மீது சுமத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கஜ்ஜா என்பவரது மகன் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து மேலும் பல முக்கிய விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார்.

தாஜூதீன் விவகாரத்தை பொலிஸ் ஊடாக ஊடக பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும், தற்போது அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட போன்ற ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரையிலும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.

முதலீடுகள் தொடர்பிலும் அரசாங்கம் பெருமிதமாகப் பேசிக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளுக்கு எதிரான இந்த அரசாங்கம் பின்பற்றும் கொள்கைகளால் வெளிநாட்டு முதலீடுகள் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஊழல், மோசடிகளை ஒழிப்பதாகக் கூறிய அரசாங்கத்திலுள்ளவர்களின் அதிகாரத்தினாலேயே அபாயம் மிக்க 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.

இவற்றுக்கு மத்தியில் துறைசார் நிபுணர்களுடன் எந்தவித கலந்தாலோசனைகளும் இன்றி பல்வேறு சட்டங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையிலேயே தற்போது மாணவர்களை தண்டித்தல் குறித்த சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் சமூகத்தில் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை. ஆசிரியர்களுக்கு மாத்திரமின்றி, பெற்றோருக்கும் தமது பிள்ளைகளின் ஒழுக்கம் தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. அவ்வாறிருக்கையில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்றார்.