இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தை நீக்குவதைத் தடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நீக்கம் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவின் தலைவர் ஈவன் பாப்பஜோர்ஜியோ மற்றும் நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி மார்த்தா வோல்ட்மைகேல் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே சிரமப்படுகின்றனர் என்றும், மாற்றுத் திட்டம் எதுவும் இல்லாமல் இந்த வரி திட்டத்தை நீக்குவது இத்துறைக்கு ஒரு கடுமையான பாதிப்பாக அமையும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய ஆய்வுகளின்படி சனத்தொகையில் சுமார் 50 சதவீதமானோர் தற்போது வறுமையில் வாழ்வதைச் சுட்டிக்காட்டிய அவர், வறுமையைக் குறைக்க இலங்கை அவசரமாக ஒரு இலக்குடன் கூடிய, நிலையான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். நாணய நிதியத் திட்டம் நுகர்வை அதிகரித்திருந்தாலும், அது முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.
பராட்டே சட்டம் மற்றும் பயனுள்ள கடன் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் இல்லாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறிய சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் அதே வேளையில், தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் ஒரு வலுவான, மக்களை மையமாகக் கொண்ட சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நாணய நிதியப் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இந்தச் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாஷிம், எரான் விக்கிரமரத்ன, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா மற்றும் எஸ். எம். மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

