மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு கலகமடக்கும் பிரிவின் ஊடாக பதிலளிக்க முயற்சிக்கும் அரசாங்கம் !

45 0

எதிர்க்கட்சிகள் மாத்திரமின்றி தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கோ, சூழலியலாளர்களின் கருத்துக்களுக்கோ அரசாங்கம் முக்கியத்துவமளிக்கவில்லை. பேச்சுவார்த்தையூடாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, கலகமடக்கும் பிரிவின் ஊடாக பதிலளிக்க முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சுமத்தினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை ( ஒக்டோபர் 1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு குற்றஞ்சுமத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கும், பறவைகளுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என சூழலியலாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் அரசாங்கம் மக்களின் போராட்டங்களுக்கோ, சூழலியலாளர்களின் கருத்துக்களுக்கோ முக்கியத்துவமளிக்காமல் அவற்றை உதாசீனப்படுத்துகிறது. இவற்றுக்கு பதிலளிப்பதற்கு ஆளுந்தரப்பில் எவரும் முன்னுரிமையளிக்கவுமில்லை.

குறைந்தபட்சம் இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் கூட இதற்கு பதிலளிக்கவில்லை. இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஆனால் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் இந்த கேள்விகளுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக கலகம் அடக்கும் பிரிவினரை அனுப்பி அவர்களை தாக்குவதே அரசாங்கத்தின் பதிலாகவுள்ளது.

கடந்த ஆட்சி காலங்களில் இவ்வாறு இடம்பெற்றால் அதற்கெதிராகவும் இவர்கள் கொடியேந்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். மின்சாரசபை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக அதனை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்றனர்.

கடந்த அரசாங்கங்கள் செய்ததையே இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கின்றது. திருகோணமலையில் இந்திய நிறுவனத்துக்கு காணி வழங்கப்பட்டமை, நுரைச்சோலையில் அனல் மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டமை உள்ளிட்ட சகல விடயங்களிலும் அன்று ஜே.வி.பி. மக்கள் சார்பாகவே செயற்பட்டது.

ஆனால் இன்று எந்தவொரு பிரச்சினை தொடர்பிலும் மக்களுடன் கலந்தாலோசிப்பதற்கு இவர்கள் தயாராக இல்லை. அரசியல், சமூக, கலாசார, பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய மாற்று சக்தியாகவே இவர்கள் தம்மை காண்பித்துக் கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் ஓர எழுத்தில் கூட மாற்றமின்றி ஜனாதிபதி அநுர அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றதைத் தவிர ரணில் செய்த அனைத்தையும் அநுர தொடர்ந்து கொண்டிருக்கின்றார். எதிர்க்கட்சிகள் மாத்திரமின்றி தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது.

இவ்வாறான வழிமுறைகளை கைவிட்டு மக்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.