ரக்பி வீரர் தாஜுதீனின் மரணம் : பிறிதொரு நாடகத்தின் பிரதியை அரங்கேற்றக்கூடாது – பொதுஜன பெரமுன

40 0

மரணத்தின் உண்மை வெளிப்படாமல் அது இரகசியமானதாக அமைவது மரணத்தை காட்டிலும் கொடுமையானதே.ரக்பி வீரர் வசீம் தாஜூதினின் மரணம் தொடர்பான இரகசியம் வெளிப்பட வேண்டும்.பிறிதொரு நாட்டியத்தை அரங்கேற்றக் கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரக்பி வீரர் வசீம் தாஜூதினின் மரணம் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தியது.

மரணத்தின் உண்மை வெளிப்படாமல் அது இரகசியமானதாக அமைவது கொடுமையானதே ஆகவே ரக்பி வீரர் வசீம் தாஜூதினின் மரணம் தொடர்பான இரகசியம் வெளிப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கம் நீண்டகாலமாக மேற்கொண்ட விசாரணைகளின் பின்னணியில் தற்போது புதிய விடயம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டு வசீம் தாஜூதினின் மாமனார் உணர்வுபூர்வமான வகையில் வசீம் தாஜூதினின் மரணம் பற்றி உரையாற்றியிருந்தார். இவ்வாறான பின்னணியில் நேற்று (நேற்று முன்தினம்) பதில் ஊடக பேச்சாளர் பிறிதொரு புதிய விடயத்தை ஊடகங்களுக்கு குறிப்பிடுகிறார்.

பதில் ஊடக பேச்சாளர் பிறிதொரு புதிய விடயத்தை ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்திய விதத்தில் உறுதியற்ற தன்மை காணப்படுவது வெளிப்படுகிறது. இந்த விவகாரம் நாடகத்துக்கு அப்பாற்பட்டு விசாரணைகளை அடிப்படையாக கொண்டதாக இருத்தல் வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் வசீம் தாஜூதினின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் போது நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப்புரிவின் பொறுப்பதியான சுஜித் தம்மிக பெரேரா என்பவர் கைது செய்யப்படுகிறார்.

இவர் பிற்பட்ட காலத்தில் ஊடகங்களில் ‘தன்னை கைது செய்து இந்த சம்பவத்தில் ஒருசில நபர்களின் பெயரை குறிப்பிடுமாறு அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். அவ்வாறு குறிப்பிட்டால்இஉதவி பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்துவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டாதாக’ குறிப்பிட்டிருந்தார்.ஆகவே வசீம் தாஜூதினின் மரணம் தொடர்பில் மீண்டும் நாடகத்தை அரங்கேற்ற கூடாது. உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றே கேட்டுக்கொள்கிறோம் என்றார்.