கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பதில் தியவடன நிலமே நிலங்க தேல, தலதா மாளிகைக்கு சொந்தமான சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மஹவத்த இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
விகாரை கிராமங்கள் சட்டத்தின் கீழ் தலதா மாளிகைக்கு சொந்தமான பரம்பரை சொத்துக்களை மாற்றுவது, குத்தகைக்கு விடுவது அல்லது அந்நியப்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தற்போதைய பதில் நிலமே கடந்த காலத்தில் தலதா மாளிகைக்கு சொந்தமான சொத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.
அதன்படி, தலதா மாளிகைக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்களை அந்நியப்படுத்துவது, மாற்றுவது அல்லது விற்பனை செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
மேலும், தலதா மாளிகையின் சொத்துக்களை முழுமையாக தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், தலதா மாளிகையின் நிர்வாகத்தை நிர்வகிக்க தற்காலிக அறங்காவலரை நியமிக்க பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

