நிதி சேவைகளுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவது அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஃபின்டெக் 2025 மாநாட்டில் ஆளுநர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார்.
செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் மாதமாக அறிவித்து, அரசாங்கத்தின் டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்திற்கு பரந்த விளம்பரம் அளிக்கும் நோக்கில் இம்மாநாடு கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து பேசிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,
“நிதி சேவைகளுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும். டிஜிட்டல் மயமாக்கல், குறிப்பாக கட்டண முறைகளை டிஜிட்டல் மயமாக்குவது, பண அச்சிடல் செலவைக் குறைத்து நிதி சேமிப்பை உருவாக்கும். இதன் பயன்கள் மத்திய வங்கியால் மேலும் மேம்படுத்தப்படும். வணிக வங்கிகளின் டிஜிட்டல் மயமாக்கல் முதலீடுகள் அதிக வருமானத்தை ஈட்டும். இது பணப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி மேலாண்மையை எளிதாக்கி, செலவுகளைக் குறைக்கும். நுகர்வோர் இதில் அதிக பயனடைவர், ஏனெனில் இது வங்கிக்குச் செல்லாமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும். டிஜிட்டல் மயமாக்கலை திறம்பட பயன்படுத்துபவர்கள் அதிக நன்மைகளைப் பெறுவர்” என்றார்.

