காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க பிரான்ஸ் தனது ஆதரவை முறையாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரான்ஸும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரு நாடுகள் தீர்வு தொடர்பான மாநாட்டில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க இதுவே சரியான தருணம் என்றார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே அமைதி ஏற்படுத்துவதற்கான ஒரு வரலாற்று ஈடுபாடாக இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பது, இஸ்ரேல் அமைதியாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என்றும், இது ஹமாஸ் அமைப்புக்கான தோல்வியாகும் என்றும் மக்ரோன் தெரிவித்தார்.
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை சர்வதேச நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஐ.நா.வில் பாலஸ்தீன தனிநாட்டுக்கான முன்மொழிவு வந்தபோது, கனடா முதலில் ஆதரவு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தும் ஆதரவு அளித்தன.
இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளன. ஜி7 மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இந்த முடிவு, பாலஸ்தீன தனிநாட்டுக்கான சர்வதேச ஆதரவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

