ஏமன் வளைகுடாவில் கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

46 0

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்குப் பதிலடியாக, ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அருகே உள்ள ஏமன் வளைகுடாவில் பயணித்த ஒரு கப்பல் மீது திங்கட்கிழமை (23) தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கப்பலுக்குச் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அதில் பயணித்த மாலுமிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கு ஆதரவு அளித்து வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையாக அரபிக்கடல் மற்றும் செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

தாக்குதலுக்குள்ளான கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதில் 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.