சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், நமது கடந்த காலத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இராச்சியத்தின் நுட்பமிகு தலைமைத்துவத்தின் கீழ் நிலையான, புதுமையான மற்றும் வளமான ஒரு பிரகாசமான எதிர்காலத்தையும் நாம் கற்பனை செய்கிறோம் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நமது இலங்கை, சவூதி ஆகிய நட்பு நாடுகள் மற்றும் மக்களுக்கு மேலும் வெற்றியையும் முன்னேற்றத்தையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (23) கொண்டாடப்படும் சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,
இச்சந்தர்ப்பத்தில், சவூதி அரேபிய இராச்சியம் அதன் நிறுவுனர் மன்னர் அப்துல்அசிஸ் பின் அப்துல்ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்களால் நிறுவப்பட்ட தனது தொண்ணூற்றைந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளில், இராச்சியத்தினை ஒன்றிணைக்கவும், அதன் அமைப்பைக் கட்டியெழுப்பவும் நிறுவனர் எடுத்த வீரச் செயல்களை நினைவு கூறுகின்றோம். அவருக்குப் பிறகு, அனைத்து மன்னர்களும் இப்பயணத்தைத் தொடர்ந்தனர். இதன் பயனாக இராச்சியமானது பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய மட்டத்திலும், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் உயர் நிலைகளை அடைந்துகொண்டது.
இச்சந்தர்ப்பத்தில், இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசிஸ், பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல்அசிஸ் மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட சவூதி மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சவூதி அரேபிய இராச்சியம் அதன் நுட்பமிகு தலைமைத்துவத்தின் கீழ் மேலும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன்.
இரண்டு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசிஸ் ஆல் ஸுஊதின் ஆட்சியின் கீழ் மற்றும் பட்டத்து இளவரசரும் மற்றும் பிரதம மந்திரியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், சவூதி அரேபிய இராச்சியம் பல்வேறு துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் மேலும் மகத்தான வளர்ச்சி மற்றும் சாதனைகளைக் கண்டுள்ளது. இது இராச்சியத்தின் விஷன் 2030 மூலம் அடையப்படுகிறது. இது நம்பிக்கைக்குரிய எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இராச்சியத்தின் வளர்ச்சிக்கான ஆழமான மூலோபாயத் திட்டங்களை உள்ளடக்கியது.
அனைத்து மட்டங்களிலும் அதன் குடிமக்களின் தரத்தை உயர்த்துகிறது. மேலும் கல்வி, சுகாதாரம் மற்றும் இளைஞர்கள் மற்றும் பெண்களை வலுவூட்டுவதன் மூலம் முதன்மையாக மக்களில் முதலீடு செய்கிறது.
அதைத் தொடர்ந்து NEOM, The Line, The Cube, Qiddiya, The Red Sea International, ROSHN மற்றும் King Salman Park போன்ற மேம்பாட்டுத் திட்டங்களில் கவனத்தைக்குவிப்பதன் மூலம் அபிவிருத்தி இலக்கை அடைந்துகொள்கிறது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் சவூதி அரேபிய இராச்சியமானது ஒரு முக்கிய பங்காளியாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், உலகளவில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஏராளமான உச்சிமாநாடுகள், மாநாடுகள் மற்றும் சந்திப்புக்களை சவூதி அரேபிய இராச்சியம் நடாத்தியுள்ளது.
அண்மைக்காலங்களில், பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியாகத் தீர்த்து, இரு நாட்டுத் தீர்வைச் செயல்படுத்த சவூதி அரேபிய இராச்சியமும் மற்றும் பிரான்ஸ் குடியரசும் மேற்கொண்ட முயற்சிகளை அனைவரும் அறிந்திருக்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவியைப் பாதுகாத்தல் மற்றும் காலநிலை அபாயங்களைக் குறைத்தல் ஆகியவற்றுக்கும் இராச்சியம் முன்னுரிமை அளிக்கிறது.
சவூதி பசுமை முயற்சி மற்றும் மத்திய கிழக்கு பசுமை முயற்சி, ரியாத்தை தளமாகக் கொண்ட ஒரு உலகளாவிய நீர் அமைப்பை நிறுவுதல் மற்றும் சுத்தமான எரிசக்தியை அதிகரித்தல் உள்ளிட்ட இந்தத் துறையில் பல முயற்சிகள் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது, சவூதி அரேபிய அரசு இம்முயற்சிகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
சவூதி அரேபியா இராச்சியமும் இலங்கை குடியரசும் இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசிஸ் அவர்களதும் மற்றும் குடியரசுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க அவர்களினதும் தலைமையின் கீழ் சிறப்பான உறவுகளைப் பேணி வருகின்றன.
இந்த ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 51 வது ஆண்டு நிறைவை நாங்கள் ஒன்றாகக் கொண்டாடினோம். எங்கள் உறவுகள் பரஸ்பர மரியாதை, பொதுவான நலன்கள் மற்றும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டவை. இரு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ விஜயங்கள் மற்றும் பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது இதற்கு சிறந்த சான்றாகும். அவற்றில் மிகச் சமீபத்தியது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கடன்களை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தமாகும். மேலும் பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன.
சவூதி – இலங்கை கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் சமீபத்தில் ரியாத்தில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பு இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் இலங்கைக் குடியரசில் நடைபெறும். இந்தக் குழுவானது பல துறைகளில் ஒத்துழைப்பினை வலுப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்துள்ளது.
பொருளாதாரத் துறையில், நமது இருதரப்பு வர்த்தக அளவு 2024ஆம் ஆண்டில் ஏறத்தாழ 275 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் இராச்சியத்திற்கு 140 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. அதே நேரத்தில் இரசிச்சியத்திலிருந்து அதன் இறக்குமதிகள் 135 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டின. எதிர்வரும் வருடங்களில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் பரிமாற்றம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்பு என்பது நமது இருதரப்பு உறவின் ஒரு அடிப்படையாகும். அபிவிருத்திக்கான சவூதி நிதியம் (SFD) இலங்கையில் 15க்கும் மேற்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது. அதன் மொத்த உதவித்தொகை 425 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது.
இந்தத் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்றான வயம்ப பல்கலைக்கழக நகர மேம்பாட்டுத் திட்டத்தை நாங்கள் சமீபத்தில் தொடங்கி வைத்தோம். இதற்க்கு மேலதிகமாக, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (Ksrelief) இலங்கையில், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் அவசரகால நிவாரணம் உள்ளிட்ட துறைகளில், 15 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள 23க்கும் மேற்பட்ட மனிதாபிமான திட்டங்கள இதுவரை செயல்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், கண் பார்வையின்மை மற்றும் அத்தோனோடு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரு சவூதி நூர் திட்டங்களை நாம் செயல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியா 250,000க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. அவர்கள் நமது நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். சவூதி அரேபிய இராச்சியம் இலங்கை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச புலமைப்பரிசில்களை வழங்கிவருகிறது. இதுவரை வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 500க்கும் மேற்பட்டது.
மேலும், வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள், ஹஜ் , உமரா மற்றும் சுற்றுலா நோக்கில் சவூதி அரேபியா நோக்கிப் பிரயாணிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவின் விஷன் 2030 என்பது சவூதி அரேபியாவை முதலீடு, புதுமை மற்றும் சுற்றுலாவிற்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான ஒரு லட்சிய வரைபடத்தைப் பிரதிபலிக்கிறது.
இப்பின்னணியில், சவூதி அரேபியாவில் உள்ள மகத்தான முதலீட்டு வாய்ப்புகளை, குறிப்பாக சுற்றுலா, தூய்மையான எரிசக்தி, விவசாயம் மற்றும் தளவாடச் சேவைகள் போன்ற நமது முன்னோடித் திட்டங்களில் முதலீடு செய்ய வருமாறும், சுற்றுலாப் பயணிகள் பயனடைய ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழங்கும் சவூதி அரேபியாவில் சுற்றுலாவை அனுபவிக்கவும் இலங்கை நிறுவனங்கள், குடிமக்கள் மற்றும் வணிகர்களை நான் அன்புடன் அழைக்கிறேன்.
இறுதியாக, நமது இரண்டு நட்பு நாடுகள் மற்றும் மக்களுக்கு மேலும் வெற்றியையும் முன்னேற்றத்தையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

