கல்முனையில் 04 உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட வேண்டும்

49 0

சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு  வெள்ளிக்கிழமை (19)  இடம்பெற்றது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி.டி.சில்வா, பிரியந்த பெர்ன்ண்டோ, சம்பத் அபேக்கோன் முன்னிலையில் இந்த வழக்கு எடுக்கப்பட்டது.

வழக்கில் எதிர் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன் வைக்கும் போது,

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலை ஒத்திவைப்பது அந்த பிரதேச மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். எனவே, கல்முனை மாநகர சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்தப்படல் வேண்டும்.

சாய்ந்தமருது நகரசபைக்கு தனியாக தேர்தல் நடத்த விரும்பினால் 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த உள்ளூராட்சி மன்ற எல்லைகளைக் கருத்தில் கொண்டு மேலும் 3 உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கப்படல் வேண்டும்.

இதன் பிரகாரம் கல்முனை பட்டின சபையை மையமாகக் கொண்டு கல்முனை மாநகர சபை, கரைவாகுப்பற்று வடக்கு கிராம சபையை மையமாகக் கொண்டு மருதமுனை பிரதேச சபை.

கரைவாகுப்பற்று மேற்கு கிராம சபையை மையமாகக் கொண்டு மேலும் ஒரு பிரதேச சபையை கல்முனையில் உருவாக்கப்படல் வேண்டும். இவ்வாறு சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் வாதிட்டார்.

வழக்கின் முழு விசாரணைகளும் நேற்று (20)பூர்த்தியடைந்தது. வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.