கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையில் புதிய வைத்தியசாலைத் தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் திறப்பு

84 0

கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக ரூ.150 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய வைத்தியசாலை தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் நேற்று வியாழக்கிழமை  (18) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

கட்டண வார்டின் பிசியோதெரபி பிரிவையும் அமைச்சரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை மற்றும் கட்டண வார்டு வளாகத்தைத் திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலை யின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மருத்துவ ஊழியர்களின் உழைப்பிற்கு தனது  பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், வைத்தியசாலைக்குத் தேவையான பௌதீக மற்றும் மனித வளங்கள் எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் இதன்போது  தெரிவித்தார் .

ஒரு வைத்தியசாலையின் வளர்ச்சி, வைத்தியசாலையைச் சுற்றியுள்ள சமூகம், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை மேம்பாட்டுக் குழுவின் பங்களிப்பைப் பொறுத்தது என்பதை வலியுறுத்திய அமைச்சர், இந்த வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு அவர்கள் அனைவரிடமிருந்தும் தொடர்ச்சியான ஆதரவு கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் அந்த ஆதரவு தொடரவேண்டும் என எதிர்பார்பதாக கூறினார்.

நாட்டில் இலவச சுகாதார சேவையை தொடர்ந்து திறமையான முறையில் பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்று கூறிய அமைச்சர், நாட்டில் இலவச சுகாதார சேவை தேசிய திட்டத்தின் படியும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும், மத்திய அரசு வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக, மாகாண சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகளும் அந்த திட்டத்தின் படி அபிவிருத்தி செய்யப்படும் என்றும், நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். கிழக்கு மாகாண மக்களுக்கு உகந்த மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் ஏற்கனவே பல சுகாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

புதிய 4 மாடி வைத்தியசாலைமற்றும் கட்டண வார்டு வளாக கட்டிடத்தின் தரை தளத்தில் பிசியோதெரபி பிரிவையும். முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் கட்டண வார்டுகளைக் கொண்டுள்ளன, மேல் தளத்தில் ஒரு கேட்போர் கூடம் மற்றும் இயக்குநர் அலுவலகமும் உள்ளது.

புதிய வைத்தியசாலை தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான ஆலோசனை சேவைகளை மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் (CECB) வழங்கியுள்ளது.

இந்த சிறப்பு நிகழ்வை தொடர்ந்து வைத்தியசாலையின் தற்போதைய சிகிச்சை சேவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார், மேலும் மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் வைத்தியசாலையின் செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் தேவைகள் குறித்த தகவல்களையும் வழங்கினர்.

பின்னர் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை ஊழியர்களுடன் சிறப்பு கலந்துரையாடலில் அமைச்சர் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் துணை அமைச்சர் எல். கல்முனைத் தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் ஜி. வசந்த பியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அத்தம்பாவ, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், டாக்டர் ஐ. எல். எம். ரிபாஸ், நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.