புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது – ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம்!

63 0

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ வியாபார அனுமதியோ வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் இன்றைய அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது பெரிய புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் பெரிய புல்லு மலையில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பிரேரணையை சபைக்கு கொண்டுவந்ததன் பிரகாரம் அது குறித்த விவாதம் சபையில் நடைபெற்றது.

இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் கூறுகையில்,

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள புல்லு மலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் மாகாண தொழிற்சாலைக்கு கடந்த 2018ஆம் ஆண்டே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த தொழிற்சாலைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

உண்மையில் புல்லுமலை கிராம மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். பிரதேச சபையில் இருந்து அந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய பவுசரை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. இதுவரை அந்த மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி வழங்க முடியும்.

எனவே, குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கான அனு ஆவணங்கள் எதுவும் இல்லை. தண்ணீர் தொழிற்சாலைக்கான கட்டட அனுமதி மற்றும் வியாபார அனுமதிக்கான ஆவணங்கள் பிரதேச சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அனுமதி வழங்கக் கூடாது என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இது குறித்து அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.

ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதி, வியாபார அனுமதி வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.