மட்டக்களப்பில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட 7 வருட சிறைத் தண்டனை !

75 0

மட்டக்களப்பில் 2014ஆம் ஆண்டில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு 20 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட  7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபதாரமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த 11ஆம் திகதி தீர்ப்பளித்தார்.

இப்பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 13 வயது சிறமியை, அப்போது 22 வயதுடைய, இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த நபருக்கு எதிராக இரு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் வழக்கு தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது சந்தேக நபருக்கு எதிரான 2 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சிகள், தடயப் பொருட்கள், வைத்திய அறிக்கைகள் மூலம் அவர் குற்றவாளி என இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து அந்நபருக்கு முதலாவது குற்றத்துக்கு 3 மாதகாலம் 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து, இரண்டாவது குற்றத்திற்கு 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதோடு, 10 இலட்சம்  ரூபா தண்டப்பணத்தை செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாவை வழங்குமாறும் அந்த பணத்தை வழங்காத பட்சத்தில் சிறைத்தண்டனை என கட்டளையிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.