இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக மாறி வருகிறது. 2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், சட்டத்தின் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் ஆண்டாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளை இன்று (17) முற்பகல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அதன்படி, கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியின் நிர்மாணப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கடவத்தை இடமாறல் மற்றும் அதிவேக நெடுஞ்சாலையின் முதல் 500 மீட்டர் பகுதியின் நிர்மாணப் பணிகளும் புதிதாக ஆரம்பிக்கப்படுகிறது. இந்த 500 மீட்டர் நெடுஞ்சாலைப் பகுதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்புடன் இணைக்கும். இந்தப் பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 8.692 பில்லியன் ரூபாவாகும். இதற்காக முழுமையாக உள்ளூர் நிதி பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் தூரம் 37 கிலோமீட்டர் ஆகும். திட்டத்தின் மொத்த செலவு 229.532 பில்லியன் ரூபாவாகும். இதற்காக உள்ளூர் நிதி மற்றும் சீன அரசாங்கத்தின் சலுகைக் கடன் ஆகியவை பயன்படுத்தப்படும். இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு தசாப்த காலத்தை இழக்கிறது. ஆனால் தற்போதைய அரசாங்கம்
அந்த தசாப்தத்தின் பாதி அல்லது அதற்கும் குறைவான காலத்திற்குள் இந்த நிலைமையை மாற்ற உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். இன்று ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஒரு தனித்துவமான சந்தர்ப்பம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாள் கூட தாமதிக்காமல், உரிய நேரத்தில் பணிகளை நிறைவு செய்து ஒப்படைக்குமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்க அரசாங்கம் பல கோணங்களில் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல் மற்றும் அனைவரையும் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல், ஆயுத பயன்பாட்டுடனான குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுதல், அரசியல் அதிகாரத்திற்குள் பரவலாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், அத்துடன் நவீன அரச சேவையை கட்டியெழுப்ப தேவையான சம்பள உயர்வு மற்றும் வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

