2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முழுமையான கால அட்டவணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் கடந்த 2025 செப்டெம்பர் 8ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
பிரதமரின் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்த பாராளுமன்ற அமர்வுகளின் அட்டவணைக்கமைய இந்த சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு எதிர்வரும் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இரண்டாம் வாசிப்பு மற்றும் வரவுசெலவுத் திட்ட உரை நவம்பர் 7ஆம் திகதி நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு நடைபெறும்.
மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும். இறுதி வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு 2025 டிசம்பர் 5ஆம் திகதி இடம்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

