கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மூடுவது தொடர்பான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

50 0

புதிய சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஒலுவில் துறைமுகம் தொடர்பான எதிர்காலத் தீர்மானம் எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள்  பிரதியமைச்சர் ரத்ன கமகேவும் கலந்துகொண்டார்.

இதன்போது ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை இயங்கு நிலைக்குக் கொண்டுவருவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைச் சரிசெய்வதாயின் புதிய சாத்தியக்கூற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையிலேயே எதிர்காலத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்திற்கான மீன்பிடித் துறைமுகமொன்றுக்கான தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், மீன்பிடித் தேவைகளுக்கான ஐஸ் உற்பத்தியை மேற்கொள்ளும் தொழிற்சாலை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய வகையில் வாழைச்சேனை பகுதியில் மீன்பிடித் துறைமுகத்தை 2026ஆம் ஆண்டு அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக  பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மூடப்படவுள்ள அரசாங்க நிறுவனங்களின் பட்டியலில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனமும் உள்ளதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மையை வினவியிருந்தார். இதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர், இது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும், இவ்வாறான தகவல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும், அரசாங்கம் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லையென்றும் தெரிவித்தார்.

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்குப் பதிலளித்த  பிரதியமைச்சர் குறிப்பிடுகையில், நவம்பர் 21ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள மீனவ சமூகத்திற்கும் புதிய ஓய்வூதிய முறை உருவாக்கப்படும். அதன்படி, இதை பங்களிப்புடனான ஓய்வூதியம் என்று அழைக்கலாம்.

எனவே, மீனவ சமூகத்திற்கு அவர்கள் செய்யும் பங்களிப்பின் அளவிற்கு ஏற்ப நன்மைகளை வழங்கும் ஒரு புதிய ஓய்வூதிய முறையாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மீனவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்டஅமைச்சின் விடயதானத்திற்கு உட்பட்ட பல விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.