வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி உயிரிழப்பு!

43 0

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கைதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைதி போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ்  களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த கைதி ஜூலை மாதம் 21 ஆம் திகதி சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் இந்த கைதி நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த கைதி மீண்டும் சுகயீனமடைந்துள்ள நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.