அரசாங்கம் ஊழல், மோசடிகளுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் தற்போது அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனமான லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் 50 சதவீதத்துக்கும் அதிக பங்குகளை தம்மிக பெரேராவின் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது. இதன் மூலம் யாருக்கும் நன்மை கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
குருணாகலில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த அரசாங்கம் ஊழல், மோசடிகளுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இலங்கையில் 80 சதவீத சந்தை வாய்ப்பினைக் கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்கள் போட்டியாளர்களாக இருந்து வருகின்றனர். எனவே இவ்விரு நிறுவனங்களும் எரிவாயு விநியோகத்தர்களிடம் சமாந்தரமாக செயற்பட்டு வந்தனர்.
ஆனால் தற்போது விலை மனு கோரலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. லாப் நிறுவனத்துக்கான எரிவாயு இறக்குமதியில் லிட்ரோ நிறுவனம் தலையிடுகிறது. கடந்த வாரம் தம்மிக பெரேராவுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தினால் லாப் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர பங்கு சந்தையிலும் மேலும் 10 சதவீத பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய லாப் நிறுவனத்தின் 50 சதவீதத்துக்கும் அதிக பங்குகள் தம்மிக பெரேராவின் நிறுவனத்திடம் காணப்படுகின்றன. யாருக்கு நன்மை கிடைப்பதற்காக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? தனவந்தர்களின் அரசியல் இந்த அரசாங்கத்தின் கீழ் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது முற்றுமுழுதாக சட்ட விரோத நடவடிக்கையாகும்.
நிறுவனங்களுக்கிடையிலான போட்டித்தன்மை இல்லாமலாக்கப்படும் போது அங்கு ஊழல் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஊழலை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கமும் அதே பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்க நிறுவனமொன்றின் 50 சதவீதத்துக்கும் அதிக பங்குகளை தம்மிக பெரேராவின் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதன் மூலம் யாருக்கு நன்மை கிடைக்கவுள்ளது? இலங்கைக்கு எரிவாயுவை வழங்கவுள்ள ஏனைய போட்டி நிறுவனங்களுக்கு இதன் மூலம் அநீதி இழைக்கப்படும் என்றார்.

