பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அது எனக்கு கிடைத்த அதிஸ்டம் என்றே கருதுகிறேன்.நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாது. சர்வதேச தலையீடுகளுக்கு அடிபணியாமல் அரச தலைவர்கள் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.அவற்றை அநாவசியமான முறையில் போராடி பெற்றுக்கொள்ள கூடாது. அவ்வாறு செயற்பட்டால் அரசாங்கமும் அநாவசியமான முறையில் முடக்குவதற்கு தயாராகும்.ஆகவே தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக வழிமுறையில் செயற்பட வேண்டும்.அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்.ஆகவே அரசாங்கம் செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியார் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
நேர்காணல் வருமாறு,
கேள்வி –கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டை அபிவிருத்தியடைய செய்து,மக்களின் அபிமானத்தை பெற்ற தாங்கள், அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கால்டன் இல்லத்துக்கு வருவீர்கள் என்று நினைத்தீர்களா?
பதில்– எனது வீட்டுக்கு வருவதை காட்டிலும் நிம்மதி ஏதும் உள்ளதா,உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தாலும் இங்கு வருவதற்கே எண்ணியிருந்தேன்.அதுவே எனது விருப்பம்.
கேள்வி –நீங்கள் மகிழ்ச்சியாகவா உள்ளீர்கள்?
பதில் -நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.
கேள்வி –எவ்வாறு பிரச்சினைகளின் போதும் மகிழ்ச்சியாக உள்ளீர்கள் ?
பதில் – அது எனது பழக்கம்.நான் எதனையும் பிரச்சினையாக கருதவில்லை.
கேள்வி –முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் இந்த அரசாங்கம் இவ்வாறு தீர்மானம் எடுக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
பதில் – அவ்வாறு இல்லை,சகல தீர்;மானங்களுக்கும் முகங்கொடுக்க தயாராகவே இருந்தேன்.
கேள்வி– அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் என்ன நினைக்கி;ன்றீர்கள் ?
பதில் – அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் சரியானதாகவும் இருக்கலாம்,பிழையானதாகவும் இருக்கலாம்.எமக்கு சரியாக இருக்கும் விடயம் அவர்களுக்கு தவறானதாக இருக்கும்.
கேள்வி –தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ராஜபக்ஷர்களை பழிவாங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.நீங்கள் என்ன நினைக்கீன்றீர்கள்
பதில் – ராஜபக்ஷர்கள் மாத்திரமல்ல அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் சகலரும் பழிவாங்கப்படுகிறார்கள்.ஆகவே அதுவொன்றும் எமக்கு பெரியதொரு விடயமல்ல,
கேள்வி – எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வாறு திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில் – அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவோம்.
கேள்வி – மஹிந்த சூறாவளி நாட்டில் மீண்டும் வீசுமா?
பதில் – வீசும், வீசும், மஹிந்த சூறாவளியாக இருக்கலாம், வேறொரு சூறாவளியாகவும் இருக்கலாம்
கேள்வி –உங்களுக்கு அவ்வாறு தெரிகிறதா?
பதில்– ஆம் அவ்வாறு தெரிகிறது
கேள்வி – அரசாங்கம் நாட்டை நிர்வகிக்கும் முறைமை பற்றி என்ன நினைக்கீன்றீர்கள் ?
பதில் – அவர்களுக்கு இயலுமான அளவில் நாட்டை நிர்வகிக்கிறார்கள்.நாங்கள் அதற்கு அச்சமடையவில்லை.மக்கள் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.ஆகவே அவர்கள் நாட்டை நிர்வகிக்க இடமளிக்க வேண்டும்.அரசாங்கம் தவறான வகையில் செயற்பட்டால் நாட்டு மக்களுக்கு அதனை நாம் எடுத்துக்காட்ட வேண்டும்.
கேள்வி –உங்களின் பக்கம் இருந்தவர்கள் கைது செய்யப்படுகிறார்களே?
பதில் -அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள்.நாங்கள் இதனை எதிர்பார்த்தோம்
கேள்வி – யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததையிட்டு இன்று என்ன நினைக்கீன்றீர்கள்
பதில் – மகிழ்ச்சியாக உள்ளது.பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர சந்தர்ப்பம் கிடைத்தது அதிஷ்டமாக கருதுகிறேன்.
கேள்வி –நாட்டில் இன்று சர்வதேச தலையீடு உள்ளதாக குறிப்பிடப்படுகிறதே?
பதில் -சர்வதேச தலையீடு என்றும் இருந்தது, இவ்வாறான தலையீடுகளுக்கு அரச தலைவர்கள் அடிபணிய கூடாது.
கேள்வி –நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறுமா ?
பதில் – நான் அவ்வாறு நினைக்கவில்லை.ஆனால் உறுதியாக குறிப்பிட முடியாது. ஏனெனில் விடுதலை புலிகள் அமைப்பு தோற்றம் பெறும் என்று எவரும் நினைக்கவில்லையே,
கேள்வி – நாட்டு மக்களில் ஒரு தரப்பினர்கள் உங்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவற்றை எவ்வாறு பொறுத்துக்கொள்கின்றீர்கள் ?
பதில் -அரசியலுக்கு வரும்போது அனைத்தையும் தாங்கிக் கொள்ள பழக வேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாவிடின் வீட்டில் தான் இருக்க வேண்டும்.
கேள்வி – நாட்டு மக்களுக்கு ஏதும் குறிப்பிட விரும்புகின்றீர்களா ?
பதில் -அரசியல்வாதிகளின் தேவையை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும்.
கேள்வி – இளைஞர்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா ?
பதில் – இளைஞர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை அநாவசியமான முறையில் போராடி பெற்றுக்கொள்ள கூடாது. அவ்வாறு செயற்பட்டால் அரசாங்கமும் அநாவசியமான முறையில் முடக்குவதற்கு தயாராகும். ஆகவே தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக வழிமுறையில் செயற்படுங்கள் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

