72 பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு – ஆனந்த விஜேபால

39 0

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும்,மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது.வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையின் போது நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பில் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போதும்இநாட்டுக்குள் வரும் போதும் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 556 பேரை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏதேனும் பகுதியில் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் துரிதரகமாக செயற்படுவதற்கு சகல பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினரை ஒன்றிணைந்து வட்சப் செயலி ஊடாக விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்கள்இ சோதனை சாவடிகள் போடப்பட்டு வாகன ங்கள் சோதிக்கப்படுகின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாகவே அண்மையில் இந்தோனேசியாவில் பிரதான நிலை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 11 பேர் சிவப்பு பிடியாணை ஊடாக கைது செய்யப்பட்டு நாட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 105 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன்,இச்சம்பவங்களுடன் தொடர்புடைய 34 துப்பாக்கிதாரிகளும்,ஒத்தாசை வழங்கியவர்கள் உட்பட 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் டி56 ரக துப்பாக்கிகள் 58 உட்பட 1698 துப்பாக்கி மற்றும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதாளகுழுக்களின் உறுப்பினர்கள் டுபாய்,இத்தாலி,பிரான்ஸ்,சுவிஸ்ர்லாந்து,கனடா,இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமான முறையில் பதுங்கியுள்ளார்கள்.இவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பு,பாதுகாப்பு அமைச்சு,வெளிவிவகாரத்துறை அமைச்சு கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களுக்கும் கடந்தகால அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு என்பது குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதற்குரிய விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் இன்று (நேற்று) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது என்றார்.