மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.இருப்பினும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக குறிப்பிட முடியாது. சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற அமர்வை தொடர்ந்து சபை ஒத்திவைப்பு வேளையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ‘மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியது.
தமிழ் மக்களும் நம்பிக்கை கொண்டார்கள். ஆனால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இதுவரையில் முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. ஆகவே மாகாணசபைத் தேர்தலை எப்போது நடத்த தீர்மானித்துள்ளீர்கள்’ என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள்,பொதுநிர்வாக அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள்,பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.இருப்பினும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக குறிப்பிட முடியாது.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை தொடர்ந்து நிர்வகிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. பழைய தேர்தலிலும் தேர்தலை நடத்த முடியாது, புதிய தேர்தல் முறையிலும் தேர்தலை நடத்துவதில் சிக்கல் காணப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம்.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் காணப்படுகிறது. சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம். தேர்தலை பிற்போடும் நோக்கம் எமக்கு கிடையாது என்றார்.

