பிரசாத் சிறிவர்தனவின் கருத்து ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும் – சபையில் பிரதமர்

38 0

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பேச்சாளர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன ஆளும் தரப்பின் உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும். பாராளுமன்றத்துக்குள் இருந்துகொண்டு பெண்களை  அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. கடுமையாக எச்சரியுங்கள் என சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகரிடம் பிரதமர் கலாநிதி  ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின் போது விசேட  கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தில்  நேற்று நடைபெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பேச்சாளர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் உறுப்பினர் ஆளும் தரப்பின் உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.இது முற்றிலும் முறையற்றது.

கடந்த காலங்களில் பாராளுமன்ற பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.இம்முறை தான் 22 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். தென்னாசிய நாடுகளில் இலங்கையில் தான் பெண் பிரதிநிதித்துவம் குறைவாகவே  காணப்பட்டது.

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற  நிலைப்பாட்டில்  இருந்துக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கின்ற நிலையில் தான் எதிர்க்கட்சியினர் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்கள்.இதனை பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அச்சுறுத்தல் என்றே குறிப்பிட வேண்டும்.

இந்த முறையற்ற கலாசாரத்தை தோற்கடிப்பதற்காகவே நாங்கள் முயற்சிக்கிறோம். லக்மாலி ஹேமசந்திரவை அவமதித்ததை ஒட்டுமொத்த பெண்களையும் அவமதித்ததாக கருத வேண்டும்.ஆகவே பெண்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமளிக்க  முடியாது. பெண் பிரதிநிதிகளின் திறமைகள் ஆண் பிரதிநிதிகளால் சவாலுக்குட்படுத்தப்படுகிறது. ஆகவே எதிர்க்கட்சியின் உறுப்பினரது முறையற்ற கருத்தை கடுமையாக எச்சரியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.