ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர் – தயாசிறி

41 0

நாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றனர். ஆனால் இன்று அவர்கள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர். இதே நிலைமை எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை நாம் மதிக்கின்றோம். வரலாற்றில் மன்னர் ஆட்சி காலத்தில் சாகும் வரை அவர்கள் ஆட்சியிலிருந்தனர். அதன் பின்னர் படிப்படியாக அந்த முறைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையிலுள்ளது. ஆனால் சகல நாடுகளிலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளும் மரியாதையும் அவ்வாறே உள்ளன.

எவ்வாறிருப்பினும் தற்போது இந்த அரசாங்கத்தால் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களும் இல்லை. அதேவேளை பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. அமைச்சரவை அமைச்சர்களுக்குள்ள பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு கூட அவர்களுக்கு சட்ட ரீதியான உரிமை இல்லை. எனவே இன்று அவர்கள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர். சமூகத்தின் மீதுள்ள கோபத்தால் உருவாக்கப்பட்டதே இந்த அரசாங்கமாகும்.

மே மாதம் கலவரத்தின் போது தேசிய சொத்துக்களை சேதப்படுத்திய பலரும் இன்று அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் தற்போதைய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க. விவசாய அமைச்சர் லால் காந்த, வர்த்தக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளடங்குகின்றனர். அன்று இவர்கள் பாராளுமன்றத்தையும் கைப்பற்றியிருந்தால் என்னவாகியிருக்கும்?

இன்று நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை அன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும். நேபாளத்தில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் ஆட்சி இடம்பெற்றது. இன்று அந்த ஆட்சிக்கு எதிராகவே மக்கள் வீதிக்கிறங்கியுள்ளனர். ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தடுத்தார். நாட்;டிலுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றனர். அவர்கள் இன்று கைவிடப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும் என்றார்.